tamilnadu

img

‘கடவுள்’ கோபித்துக் கொள்ள மாட்டார்!

தமிழகம் முழுவதும் பல லட்சம் குடும்பங்கள் குடியிருக்க வீட்டுமனையில்லாமலும், பல லட்சம் பேர் ஏரி, குளக்கரைகளில், நெடுஞ்சாலை ஓரங்கள், பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை புறம்போக்கு நிலங்களில் குடியிருந்து வருகின்றனர்.இவர்களுக்கு பட்டா இல்லாமலேயே ஆண்டு கணக்கில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களைப் போலவே கோவில், மடம்,அறக்கட்டளை, வக்பு வாரியம், தேவாலயங்களுக்கு சொந்தமான இடங்களில் பல தலைமுறைகளாக காடு, மேடாக இருந்த இடங்களை சீர்செய்து வீடுகட்டி வாழ்ந்து வருகின்றனர்.இவர்களுக்கு குடிமனைப்பட்டா வழங்க வேண்டுமென நீண்ட காலமாக போராடி வருகின்றனர்.ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு குடிமனையும் பட்டாவும் வழங்குவதற்கு பட்ஜெட்கூட்டத் தொடரில் சிறப்பு அரசாணை வெளியிடும். அந்த வகையில் இந்த ஆண்டும்30.8.2019 அன்று அரசாணை 318 வெளியிடப்பட்டது.

அரசாணை 318 சொல்வதென்ன?
ஆட்சேபணையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் குடியிருப்பவர்களுக்கு சில நெறிமுறைகளுக்கு உட்பட்டு, வரன்முறைப்படுத்தி, தகுதியான பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா இலவசமாக வழங்குவது:
நீர்நிலைகள், கால்வாய்கள், சாலைகள் போன்ற ஆட்சேபகரமான இடங்களில் குடியிருப்பவர்களுக்கு மாற்று இடத்தை தேர்வு செய்து அவர்களுக்கு பட்டா வழங்குவது- போன்ற பல்வேறு விபரங்களை உள்ளடக்கியதாக உள்ள அரசாணை 318ல், 5வதுபிரிவில் நீண்ட கால ஏக்கப் பெருமூச்சாக இருந்த கோவில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கான பகுதி கீழ்க்கண்டபடி வெளியிடப்பட்டுள்ளது:“கோவில் நிலங்களில் உள்ள குடியிருப்பு ஆக்ரமானங்கள் அதில் குடியிருக்கும் ஏழை குடும்பங்களின் நலன் கருதி விதிமுறைகளுக்குட்பட்டு, தகுதியான நபர்களுக்குவீட்டுமனைப்பட்டா வழங்கி வரன்முறைப்படுத்த அந்த நிலங்களை உரிய வகையில் கையகப்படுத்தி நிலமதிப்பு நிர்ணயம் செய்வதற்கு அரசாணை (நிலை) எண் 200வழிகாட்டுதல்களின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதற்கான முன்மொழிவுடன் மாவட்ட வாரியாக நில உரிமை பெற்றுள்ள கோவில் வாரியாகதொகுக்கப்பட்டு, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வாயிலாக அரசுக்கு அனுப்பி, அரசின் ஆணை பெற்று அதன் அடிப்படையில் வரன்முறைப்படுத்தப்பட வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக ஆளுநரின் ஒப்புதலைப் பெற்று 30.8.2019 அன்று தமிழக அரசின் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது ஒரு ஆண்டு காலத்திற்கு அமலில் இருக்கும்.

அரசாணை 318-ஐ செயல்படுத்த கூடாதென்ற வழக்கும் அரசின் நிலைபாடும்
அரசாணை வெளிவந்து சில நாட்களிலேயே, சேலம் மாவட்டத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்ற இந்துத்துவா அமைப்புகளின் பின்புலத்தை அடிப்படையாக கொண்டவர் கோவில் இடத்திற்கு பட்டா வழங்கும்வகையில் அரசாணை வெளியிட்டது தவறு,உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது; எனவே அரசாணை 318-ஐ ரத்து செய்யவேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தற்போது உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று, வெள்ளியன்று அரசாணைக்கு தடைவந்தது. நீதிமன்றம் உத்தரவுபிறப்பித்துள்ள துரதிர்திஷ்டமும் நடந்துள்ளது.

கோயில் சொத்துக்களை தனிநபர்களுக்கு பட்டா போட்டு கொடுக்கக் கூடாது, 2004ம் ஆண்டு உச்சநீதிமன்றம் கோவில் இடத்தை விற்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது; எனவே தமிழக அரசு ஆணையை திரும்ப பெற வேண்டுமென எச்.ராஜா, அர்ஜூன் சம்பத் உள்ளிட்டவர்கள் பொதுவெளியில் உண்மைக்கு மாறாக பேசி வருகின்றனர். தங்களை ‘இந்துக்களின் காவலர்கள்’ என கூறிக்கொள்ளும் இவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள கோவில் இடங்களிலும், நிலங்களிலும், குடியிருப்பவர்களும் நிலத்தை சாகுபடி செய்பவர்களும் 99 சதவீதம்பேர் சாதாரண ஏழை இந்துக்கள் தான்என்பதை மறந்துவிட்டு எந்த இந்துக்களுக்காக பேசுகின்றனர் என தெரியவில்லை.2004ம் ஆண்டு கோவில் இடம் விற்பனைதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் கோவில் இடங்களை எக்காரணம் கொண்டும் இலவசமாக விற்கக்கூடாது எனவும், கோவில் இடங்களுக்கு ஏதாவது ஒரு தொகையை தீர்மானித்து அந்த விலைக்குத்தான் விற்கவேண்டுமென உத்தரவிட்டுள்ளது. எனவேராதாகிருஷ்ணன் தொடர்ந்துள்ள வழக்கு தேவையில்லாதது. தமிழக அரசின் அரசாணை 318லும் கோவில் இடங்களில் குடியிருப்பவர்களுக்கு இலவசமாக பட்டா வழங்குவதாக எங்கும் குறிப்பிடவில்லை. மாறாக எந்த கோவில் பெயரில் இடம் உள்ளதோ அதை ஆய்வு செய்து அறநிலையத்துறை அதிகாரிகள் மூலம், வருவாய்த்துறை நில மதிப்பு நிர்ணயம் செய்வதற்கு அறநிலையத்துறை அரசாணை 200ஐ பின்பற்றி உரிய தொகையை அரசே செலுத்தியபிறகு தான் அந்த இடங்களை கையகப்படுத்தி பயனாளிகளுக்கு வழங்கவுள்ளது. (கிராமப்புறங்களில் 3 சென்ட், நகரங்களில் 1.5 சென்ட்). எனவே ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, அர்ஜூன் சம்பத் போன்றவர்களின் பொய்பிரச்சாரங்களும், வழக்கும் பெரும்பான்மை இந்துக்களுக்கு எதிரானது.
அரசுத்தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் அரசின் சார்பில் கோயில் இடங்களை சம்பந்தப்பட்ட அறநிலையத்துறை ஒப்புதல் பெறாமல் கையகப்படுத்த மாட்டோம், கையகப்படுத்தும் இடங்களுக்கு உரிய தொகையை அரசு செலுத்திவிடும், முழு விபரங்களையும் நீதிமன்றத்தில் தெரிவிப்போம், அதுவரை அரசாணை 318-ஐ செயல்படுத்த மாட்டோம் என அரசு சார்பில் தெரிவித்துள்ளார்.னர். வழக்கு நடைபெற்று வருகிறது. தமிழக அரசைப் பொறுத்தவரை அரசாணை 318-ஐ நீர்த்து போக விடாமல் முறையாக வழக்கை எதிர்கொண்டு பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என கோவில் இடத்தில் குடியிருப்பவர்கள் எதிர்பார்த்திருக்கும் நிலையில், சில தினங்களுக்குமுன் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் தங்களுடைய எஜமானர்களாக விளங்கும் மத்திய அரசின் நிர்ப்பந்தத்தாலும், மதவாத சக்திகளின் நிர்ப்பந்தத்திற்கு பணிந்து கோவில் இடங்களுக்கு குடிமனை பட்டா வழங்கக் கூடிய உத்தரவை திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாக வந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. பல்லாயிரக்கணக்கான குடியிருப்புவாசிகளுக்கு தமிழக முதல்வர் கொடுத்த வாக்குறுதியை மீறுவதாக உள்ளது.

மானிய கோரிக்கையும் முதல்வர் வாக்குறுதியும்
தமிழக அரசின் நிதிநிலையறிக்கை பட்ஜெட் கூட்டத்தொடரில் மானியக்கோரிக்கை 47ல் 2019-2020 கொள்கை விளக்ககுறிப்பில் குறிப்பிட்டுள்ள விபரங்களின் படி,தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 38,612 கோவில்களும், 56 திருமடங்களும், 57 திருமடங்களோடு இணைந்த கோவில்களும், 1721 குறிப்பிட்ட அறக்கட்டளைகளும், 189 அறக்கட்டளைகளும், 17 சமண திருக்கோவில்களும் உள்ளன.இவற்றின் பெயர்களில் 2லட்சத்து  4ஆயிரம் ஏக்கர் நன்செய் நிலங்களும், 2 லட்சத்து 53 ஆயிரம் ஏக்கர் புன்செய் நிலங்களும், 21 ஆயிரம்ஏக்கர் மானாவரி நிலங்களும், சேர்த்து 4 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் நிலங்களும், 22600கட்டிடங்களும், 33665 மனைகளும் உள்ளன.இந்த நிலங்கள், கட்டிடங்கள், மனைப்பிரிவுகளில் உள்ளவர்கள் அறநிலையத்துறை தீர்மானித்த வாடகை, குத்தகையை செலுத்தி வருகின்றனர். இதுபோக வரன்முறைப்படுத்தாத மனைகளில் குடியிருப்பவர்கள் பல்லாயிரக்கணக்கில் உள்ளனர். 33665 மனைகளில் மட்டும் 5 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் உள்ளனர். இவர்களுக்கு பட்டா வழங்கவேண்டும் என நீண்ட நாள் கோரிக்கை வைத்து வந்த நிலையில் தான் கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திருவாரூர்மாவட்டம் கொரடாச்சேரியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கோவில் இடத்தில் நீண்டகாலமான குடியிருந்து வரும்ஏழை, எளிய மக்களுக்கு பட்டா வழங்க அரசு உரிய முயற்சி செய்து வருகிறது. விரைவில் பட்டா வழங்குவோம் என வாக்குறுதி கொடுத்தார். சட்டமன்ற விவாதத்திலும் குறிப்பிட்டார். எனவே தமிழக முதல்வர் குறிப்பிட்டப்படி பட்டா வழங்குவதற்கான சட்டரீதியான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை
அரசாணை 318 -ஐ ரத்து செய்ய வேண்டுமென்ற வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளியன்று (22.11.2019) இடைக்கால தடைஉத்தரவு பிறப்பித்துள்ளது. இது பல்லாயிரக்கணக்கான கோவில் இடத்தில் குடியிருப்பவர்கள் நெஞ்சில் “வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போல்” உள்ளது.தமிழக அரசு உரிய தொகையை செலுத்திநீண்டகாலமாக கோவில் இடத்தில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க, தான் போட்ட உத்தரவை செயல்படுத்தும் வகையில் நீதிமன்றத்தில் தனது வாதங்களை மக்கள் நலன் சார்ந்து எடுத்து வைக்க வேண்டும். உச்சநீதிமன்றம் 2004ல் கோவில்இடங்களை விற்கக்கூடாது என உத்தரவிடவில்லை; மாறாக இலவசமாக தரக்கூடாது என்றுதான் கூறியுள்ளது. மேலும் 1959ல் உருவாக்கப்பட்ட அறநிலைய சட்டம் 34 ஆவது பிரிவு கோவில் இடத்தை விற்பதற்கு,பரிவர்த்தனை செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளது. 27 முறை அறநிலையத்துறையின் சட்டம் மாற்றம் செய்யப்பட்டுள்ள போதும்இன்றுவரை 34 வது சட்டப்பிரிவு இருக்கிறது.எனவே நீதிமன்றத்தின் இடைக்கால தடை உத்தரவை நீக்கக்கூடிய வகையில் தமிழக அரசின் நடவடிக்கை அமைய வேண்டும்.

இயலாதவர்களின் ‘ஏக்கப் பெரும் மூச்சாக’ விளங்கும் கடவுளுக்கு சொந்தமான இடங்களில் பல தலைமுறைகளாக குடியிருப்பவர்களுக்கு குடிமனை பட்டா வழங்கினால் ‘ஏழைகளின் காவலர்’ கடவுள் கோபித்துகொள்ள மாட்டார். எனவே தான் நவம்பர் 26அன்று மாநிலம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோவில், மடம்,அறக்கட்டளை, வக்பு வாரியம், புறம்போக்கு இடங்களில் குடியிருப்பவர்களுக்கு பட்டாகேட்டு அரசாணை 318-ஐ செயல்படுத்தக் கோரி மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டம்நடைபெறவுள்ளது. கோரிக்கைகள் நிறைவேறஆயிரம், ஆயிரமாய் அணி திரள்வோம்!

கட்டுரையாளர் : சாமி.நடராஜன்,மாநில அமைப்பாளர்,  தமிழ்நாடு அனைத்து சமய நிறுவன நிலங்களில் குடியிருப்போர், சாகுபடி  செய்வோர் பாதுகாப்பு கூட்டமைப்பு

;